பாடல் பெற்ற சிவத்தலம் - திருத்தலைச்சங்காடு சங்கவனேசுவரர் கோவில் நாகபட்டினம்

 
 

பாடல் பெற்ற சிவத்தலம் திருத்தலைச்சங்காடு சங்கவனேசுவரர் கோவில் நாகபட்டினம்

தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் 127 இல் “திருத்தலைச்சங்காடு” 45 ஆவது தலம். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெருமை வாய்ந்த தலம். மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 21 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. அருகில் திருஆக்கூர் என்ற பாடல் பெற்ற தலம் இருக்கிறது. திருக்கடையூரில் இருந்து 8 கி.மீ. வடக்கே பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம்.

கோச்செங்கட் சோழனால் யானை நுழைய முடியாத அளவுக்கு வாசல் கொண்டு கட்டப்பட்ட மாடக் கோவில்களில் திருதலைச்சங்காடு சங்கவனேசுவரர் அல்லது சங்காரண்யேசுவரர் கோவிலும் ஒன்றாகும்.கோவிலுக்கு பெரிய கோபுரம் இல்லை. ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது. கிழக்கிலுள்ள நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வெளித் திருச்சுற்றில் நேர் எதிரே நந்தி மண்டபம் மற்றும் பலிபீடத்தைக் காணலாம். பலிபீடத்தின் பின்னால் சற்று உயரமான மேடையில் இறைவன் சங்காரண்யேசுவரர் பீடம் அமைந்துள்ளது. தெற்கு வெளித் திருச்சுற்றில் உள்ள வாயில் வழியே படிகள் ஏறி இறைவன் பீடத்தில் உள்ள முன்மண்டபத்திற்குச் செல்ல வேண்டும். முன் மண்டபத்தைக் கடந்து சென்றால் கருவறையில் மூலவர் சங்காரண்யேசுவரர் காட்சி தருகிறார்.

மூலவருக்கு நல்லெண்ணை ஊற்றித் மங்கலநீராட்டு செய்யும் போது விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் சிவலிங்கத்தின் மீது மயிர்க்கால்கள் தெரியும் சிறப்புடையது இத்தலம் என்பர். கருவறைத் திருச்சுற்றில் சண்டிகேசுவரர்,திருமால், சுரகரேசுவரர், இராமன், சீதை மற்றும் தேவார நால்வர் சிலைகளைக் காணலாம்.

தெற்கு வெளித் திருச்சுற்றில் விநாயகர் , மேற்கு வெளித் திருச்சுற்றில் முருகன் , வடக்கு வெந்த் திருச்சுற்றில் சண்டிகேசுவரருக்கு தனிச் சந்நிதியும் உள்ளன. மேற்கு வெளித் திருச்சுற்றில் தனிச் சந்நிதியில் திருமால் சீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமால் இத்தலத்தில் சங்காரண்யேசுவரரை வழிபட்டு, தனது ஆயுதமாக பாஞ்சசன்னியம் என்னும் சங்கைப் பெற்ற சிறப்புடையது இத்தலம்.

கிழக்கு வெளித் திருச்சுற்றில் வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி சௌந்தரநாயகி சந்நிதி அமைந்துள்ளது. இறைவி கருவறை வாயிலின் வெளியே இடதுபுறம் புவனேசுவரியின் தனிச் சந்நிதி அமைந்துள்ளது.

இக்கோயில் உமை முருகு உடையார் என்னும் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. அதாவது கோயிலில் நுழைந்தவுடன் இடது பக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியும் உள்ளதைக் காணலாம்

இத்தலத்தின் தலமரமான புரசமரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் மற்றும் விநாயகர் திரு உருவங்களைக் காணலாம். ஆலயத்தின் தீர்த்தம் சங்குதீர்த்தம் கோவிலுக்கு எதிரில் உள்ளது. இத்தீர்த்தத்தில் பௌர்ணமி நாளில் நீராடுவது சிறப்பு என்பர்.

திருச்சிற்றம்பலம்

நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதஞ்
சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர்
குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலுந்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.

துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர்
மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர்
பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர்
நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத்
தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே.

வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.

நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.

அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர்
பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்
கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை
வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர்
அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை
நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே.

பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்
போயோங்கிக் காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார்
தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்
சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்
தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே.

நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்
குளிருந் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை
ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்
மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.

திருச்சிற்றம்பலம்



திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க...

மேலும் வாசிக்க...
இருதயநோய் விலக அதன் வலிமை குறையை பாடவேண்டிய பதிகங்கள்

மேலும் வாசிக்க...
எடுத்த காரியம் வெற்றிபெற, செய்வினைகள் அகல...

மேலும் வாசிக்க...