விதியை வெல்லும் வழிமுறைகள் – விதிமாற்றும் விரிசடையான்

 
 

விதிமாற்றும் விரிசடையான்

சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே

நீங்கள் விதியை வெல்ல முடியுமா? நிச்சயமாக வெல்லலாம்.

விரிசடையான் துணைகொண்டு விதியை வெல்லலாம் என்று ஆணையாகச் சொல்லுகிறார் திருஞானசம்பந்தர் சுவாமிகள்.

உலகின் முதற்கடவுளும், சைவத்தினையும் தமிழினையும் உருவாக்கிய  சிவபெருமானின் பாதங்களை , அவனருளாலே வணங்கி திருவருட் துணையுடன் உண்மைகளை உங்களிடம் பகிர்வதில் பேரானந்தம் அடைகிறேன்.

தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லும், அதன் ஓசையும், ஒலியும் இறைவனால் உருவாக்கப்பட்டவை. அதனாலே தான் தமிழ், தெய்வத்தமிழாகப் போற்றப்படுகின்றது.கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து, பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ் என்ற பரஞ்சோதி முனிவரின் வரிகளும், நிழல்பொலி, கணிச்சிமணி நெற்றி, உமிழ் செங்கண், தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் என்ற கம்பரின் வரிகளும் தெய்வத்தமிழின் தோற்றத்தினை தெளிவாக்கியுள்ளன.

தமிழ் மொழியை முத்தமிழ் என்பதற்கு இயல், இசை, நாடகம் என்பதை விடவும் இன்னும் ஒரு கருத்தியலும் இருந்து வருகிறது. தமிழ் மொழியானது மந்திரம் (மனதைத் திரமடையச் செய்யும் தன்மை) , மந்தரம் (மனதைத் தரமடையச் செய்யும் தன்மை) மற்றும் மந்திறம் (மனதைத் திறமையடையச் செய்யும் தன்மை) என்ற மூன்று வகை ஆற்றலை உடையது. இது தெய்வத்தமிழாகிய எங்கள் பைந்தமிழுக்கே உரிய சிறப்பம்சமாகும்.

வினையும் விதியும் – வினையின் விளைவே விதியாகும்

தமிழ் இலக்கணமாயினும் சரி, சைவக் கோட்பாடாயினும் சரி, வினை என்றால் ஒரு செயலையே குறிக்கும். நாங்கள் வாழ்க்கையில் விரும்பியோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ, நினைத்தோ நினைக்காமலோ பலவிதமான செய்கைகளை அதாவது வினைகளைச் செய்கிறோம்.அவை நல்லதாக இருந்தால் நல்வினை என்றும் தீயவையாயின் தீவினை என்றும் இரண்டு பிரிவுகளாகின்றன.

சுதந்திரமான வாழ்க்கையை உங்களுக்கு தருவதற்காக கடவுளின் படைப்பில் மனிதரை சுயாதீனமாகப் படைத்தது ஆறாம் அறிவு எனும் பிரித்தறியும் திறனையும் சேர்த்து பூவுலகுக்கு அனுப்புகிறார். அந்த ஆறாம் அறிவைப் பயன்படுத்தி எது சரி எது பிழையென்று பிரித்தறிய முடியாமல் எமக்காக, எம்மைச் சார்ந்தவர்களுக்காக மனம், வாக்கு, காயம் இவை மூன்றினாலும் ஐம்பொறிகளாலும் நாங்கள் பலவகையான தீய வினைகளைச் செய்து இறுதியில் தீவினைத் தொகுப்பையே மேலோங்கச் செய்கிறோம்.

வினையும் விதியும் என்ற விடயத்தில் இன்னுமொரு கருத்தையும் நாம் கவனிக்கவேண்டும்.இந்த நூற்றாண்டில் விதியெனப்படும் சட்டவிதிகளால் வினையாகிய குற்றங்களை கட்டுபடுத்தியும், தண்டித்தும் வருகிறது நீதிமன்றம். இதையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, வினையின் விளைவே விதியாகும் என்றும் வினைகளைக் கட்டுப்படுத்த இறைவழியினை முதன்மை வழியாகவும் கொண்டும் வாழ்ந்தனர் சைவத்தமிழர்கள்.அத்துடன் ஊழ்வினையாகிய முற்பிறப்பு வினைகளையும் அழிக்கும் உபாயத்தினையும் கையாண்டு விதியை வென்று வாழ்ந்தனர் பண்டைத் தமிழர்கள். மனிதர்களின் விதிகளில் இயங்கும் நீதிமன்றத்தால் தண்டனைக் காலத்தினைக் குறைத்து மன்னிப்புக் கொடுக்கும் பொழுது, உயிர்களிடத்தில் எல்லையற்ற அன்பைக் கொண்ட எம்பெருமான் விதியினை நிச்சயம் மாற்றி உங்களுக்கு அருள்பாலிப்பார் என்பதில் ஐயமேது.

நாம் செய்யும் சகல வினைகளுக்கு மூலகாரணம் எங்களின் மனம்.ஆறாம் அறிவினைப் பயன்படுத்தி மனதை நெறிப்படுத்தி நல்லதை செய்தால் விதி நல்லாயிருக்கும், பிரித்தறியாமல் தீயவற்றினை செய்தால் விதி மாறிப்போகிறது.அந்தவகையில் விதியை வெல்லும் போரில் வெல்லவேண்டியது மனமே என்ற உண்மை வெளிப்படுகிறது.இனி மனதை வெல்வது எப்படி என்று பார்த்தால், முத்தமிழின் திறனாகிய மந்திரம், மந்தரம் மற்றும் மந்திறம் ஆகிய மூன்றாலும் என்ற தெளிவு பிறக்கிறது. அந்தவகையில் தமிழ் வேதங்களாகிய திருமுறைகளை, விரிசடையானை நினைந்து ஒலியெழுப்பி பாடுவதன் மூலம் மனம் திரம், தரம் மற்றும் திறம் அடைகின்றது. இந்நிலையில் உள்ள மனம் நல்லதையே செய்யும். அதனால் நல்வினைப் பயனையே அனுபவிக்கும். அத்துடன் திருமுறைகள் ஊழ் வினையையும் அறுத்து பேரின்பப் பெருவாழ்வினை தரவல்ல மருந்தாகவே இருக்கின்றன.

ஆமை தன் கால்கள், தலை முதலாய ஐந்து உறுப்புக்களையும் ஓட்டுக்குள் ஒடுக்கி தன்னைப் பாதுகாப்பது போல் மனிதன் ஐம்புலன்களையும் அடக்கி மனம் பொறி வழிப்போகாது வாழ்ந்தால் அது அவனது ஏழுவகையான பிறப்புகளையும் சிறப்படையைச் செய்யும், என்கிறார் வள்ளுவப்பெருந்தகை.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 126

சைவநெறிக் கோட்பாட்டில் இந்தப்பிறப்பில் மட்டுமல்ல முற்பிறப்பு வினைகளும் தொடர்கின்றன என்ற நம்பிக்கையும் வலுவாக இருக்கிறது.

சிவகங்கையைச் சேர்ந்த கவியோகி சுத்தானந்த பாரதியார் ‘தூக்கிய திருவடி துணையென நம்பினேன் துரிய நடராசனே’ என்ற தம் பாடலில்

எத்தனையோ பிறவி எடுத்தெடுத்து இளைத்தேன்
இருவினைப் பயன்களை எய்தி எய்திக் களைத்தேன்,
சித்தம் இனி உன்மேல் வைத்திருக்க நினைத்தேன்
திக்கு வேறில்லை ஐயா! தீனரைக் காக்கும் மெய்யா

என்று பாடி, மனிதர்கள் பலப்பல பிறவிகள் எடுப்பார்கள் என்பதையும் வினைப்பயனின் பயணத்தினையும் எடுத்துரைத்துள்ளார்.

நாலடியாரில் வரும் வரிகளைப் பார்த்தால்

தாம்செய் வினை அல்லால் தம்மோடு செல்வதுமற்று
யாங்கணுந் தேரின், பிறிதில்லை, – ஆங்குத்தாம்
போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே,
கூற்றங் கொண்டோடும் பொழுது

இதிலிருந்தும் நாம் செய்கின்ற வினைகளே மட்டுமே உயிருடன் சேர்ந்து போகின்றதே அல்லாமல் பிறிதொன்றுமில்லை என்பது புலனாகிறது. அதுவே ஊழாகவும், பழவினையாக மறுபிறப்பில் வந்து விதியாக வேலை செய்கிறது எனலாம்.

வினையை அறுக்க முடியுமா? அதனால் வரும் விதியை வெல்ல முடியுமா?

திருஞானசம்பந்தர் வாக்கு

நிச்சயமாக வினைகளை அறுத்து அதனால் ஏற்படுகின்ற வினைப்பயனாகிய விதியினை சிவத்தின் திருவருள் கொண்டு மாற்றலாம் என்று திருஞானசம்பந்தப் பெருமான் ஆணையாகக் கூறுகிறார். மூன்றாம் திருமுறைத் திருவெண்காட்டுப் பதிகத்தின் பதினோராவது பாடலாகிய, பாடலின் பலன்களை விழிக்கும் திருக்கடைக்காப்பில் தமிழ் ஞானசம்பந்தர்,

நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன் எம் சிவனுறை திருவெண்காட்டின் மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே

பல வகையான புண்ணியங்கள் செய்த நல்லவர்கள் வசிக்கின்ற திருப்புகலியுள் (சீர்காழி) அவதரித்த ஞானசம்பந்தன், செல்வனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவெண்காட்டில் பாடிய அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பத்தியொடு ஓதவல்லவர்களுடைய துன்பங்கள் மறைவதோடு அவற்றிற்குக் காரணமான அருவினையும் (இலகுவில் அகலாத) அறும் என்பது நமது ஆணையாகும் என்று சத்தியம் செய்கிறார்.

திருஞானசம்பந்தரின் முதலாம் திருமுறை திருக்கழுமலப் பதிகத்தில் “வினைகெட மன நினைவது முடிகெனில் நனி தொழுதெழு” என்று வினைகள் அழிந்து,  மனத்தில் நினைத்தது நடைபெறவும் வேண்டுமெனில் பிறைசூடும் அண்ணலாரின் திருவடி நன்கு தொழுதெழுக என்று பாடியுள்ளார்.

தோடுடைய செவியன் பதிகத்தின் திருகடைக்காப்பிலிருந்து

ஒருநெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே

அத்துடன் முதல் திருமுறை கண்ணார்கோயில் பதிகத்தில்

கண்ணார் கோயில் கைதொழுவார்கட்கு இடர்பாவம்
நண்ணா வாகும் நல்வினை ஆய நணுகும்மே

திருக்கண்ணார் கோயிலைக் கைகளால் தொழுது வணங்குவாரைத் துன்பங்களும் பாவங்களும் அணுகாது மாறாக நல்வினைகளும் அவற்றின் பயனான இன்பங்களே வந்துசேரும் என்பதிலிருந்து சிவவழிபாடு விதியை மாற்றும் அல்லது வெல்ல உதவும் என்று அறிந்து கொள்ளமுடிகிறது.

சுந்தரர் வாக்கு

சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம் திருமுறையில் திருப்பூவணம் திருப்பதிகத்தில் பாவவினைகளை அறுக்கும் புரிவுடையார் உறையும் திருப்பூவணம் என்று விரிசடையானின் வினையறுக்கும் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

திருவுடையார் திருமால் அயனாலும்
உருவுடையார் உமையாளை ஓர்பாகம்
பரிவுடையார் அடைவார் வினைதீர்க்கும்
புரிவுடையார் உறை பூவணம் ஈதோ

திருமால், பிரமன் ஆகிய காரணக் கடவுளரிலும் மேலான திருவுடையவரும், தமது திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரும், அன்புடன் தம்மை நாடும் அடியவர்களின் வினைகளைத் தீர்க்க ஆவலாய் இருப்பவருமாகிய சிவபெருமான் திருப்பூவணம் என்னும் தலதில் எழுந்தருளியுள்ளார்.

சீரின் மிகப் பொலியும் திருப்பூவணம்
ஆர இருப்பிடமாக உறைவான் தனை
ஊரன் உரைத்த சொன் மாலைகள் பத்திவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே

திருப்பூவணம் பதிகத்தில் உள்ள, ஊரன் என்கின்ற நம்பியாரூரன் பாடிய இச்சொல் மாலைகள் பத்தினையும் பாடுபவர் தங்கள் பாவங்களை அறுத்து, வினைகளைக் களைந்து விதியினை வெல்வார்கள் என்று வாக்குறுதி அளிக்கிறார்.

திருநாவுக்கரசு நாயனார் வாக்கு

நான்காம் திருமுறையில் பாவநாசத் திருப்பதிகத்தில் அப்பர் பெருமானும் பாவங்களை போக்குவான் விரிசடையான் என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளேறு ஊர்ந்தானை
அந்திச் செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானைச்
சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை அடி சேர்த்தி
எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவநாசமே

ஆதியில் தானாகவே தோன்றிய சிவபெருமான், வலிமை பொருந்திய வெள்ளைநிறக் காளையை ஊர்தியாகக் கொண்டவர். மாலை நேரச் செவ்வானத்தின் நிறத்தினை உடைய அவர், அரக்கனின் ஆற்றலை அழித்தவர். அவரை மனதிலே நிறுத்தி திருநீராட்டி, இனிய சொற்களாலான பாடல்களை பாமாலையாக திருவடியில் சேர்த்து, அவரைத் தந்தையாக, எம்பெருமானாக, கடந்தும் உள்ளேயும் உள்ள கடவுளாக போற்றுபவர்களின் வினைகள் கெட்டு (பாவங்கள் நாசமாகி) நிறைவான வாழ்வு கிடைக்கும். வினைகள் கெடுவதால் விதியில் மற்றம் ஏற்பட்டு வாழ்வு மிளிரும் என்பதே உட்கருத்து.

அதுபோல் மணிவாசகரும் விரிசடையானின் வித்தகத்தினை பின்வருமாறு குறிப்பிடுகிறார்,

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க

இந்தவரிகளைப் பார்த்தால், வேகத்தின் விளைவால் பல வினைகள் செய்து சேகரிக்காமல் வேகத்தினை குறைத்து விவேகத்தினை கூட்டி என்னை ஆண்டருளுகின்ற வேந்தன் அடி வெல்க என்றும் அத்துடன் அவனே பிறப்பை அறுக்கும் தலையில் அலங்காரம் கொண்ட தலைவன் என்று விழித்துப்பாடுகிறார். சகல வினைகளையும் அறுத்தபின் சிவமாக்கி பிறப்பினை அறுத்து மீண்டும் பிறப்பில்லா பேரின்பப் பெருவாழ்வு நிலையை தந்து சிவபுரத்தில் இடமளிக்கிறார்.

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

சிந்தை மகிழச் சிவபுராணத்தினை, சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுபவர்களின் முந்தை அதாவது முன்னைய வினைகள் முழுவதும் ஓயும், அறும் என்கிறார் மணிவாசகப்பெருமான்.

மாணிக்கவாசகரின் திருவாசகம் எட்டாம் திருமுறை – அச்சோப் பதிகம்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட
அத்தன்எனக் கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே

பேரின்ப வாழ்வின்  வழியை அறியாத தீவினையாளருடன்  கூடி அவர் வழியில் சென்ற தனக்கு, தன் பழவினைகள் ஓடும்படி மனமாசு அகற்றி, தன்னைச் சிவமாக்கி ஆட்கொண்டார் என்ற வரிகளில் பழவினைகள் அதாவது பழைய வினைகளின் தொடர்ச்சி மறுபிறப்பிற்கு வரும் என்ற கருத்தையும், அவற்றினை விரிசடையான், ஓடும்படி செய்து தன்னை ஆட்கொண்டான் என்று சொல்லி திருவாசகத்தினை மலர்ந்தருளும் போது, அந்த திருவாசகத்தினை அழகிய சிற்றம்பலமுடையான் தன் கைப்பட எழுதியுள்ளார். மாசற்ற சோதியாகிய நிமலன், இது பொய்வாக்கியம் என்றால் தன் கையால் எழுதுவாரா என்ற கேள்விக்கான விடையே விதியை வெல்லும் விரிசடையான் என்ற இந்த நூலின் கருப்பொருளாகும்.

திருவாசகம் போற்றித் திருவகவலில்

தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதியனாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி

அதாவது வினைகெடக் கைதரவல்ல கடவுளே போற்றி என்று விழித்துப்பாடுகிறார். அதிலும் வினைகளை கெடுத்து கைதரும் கடவுளாகிய சிவபெருமான் என்பதை குறிப்பிடுகிறார்.

திருமூலரின் திருமந்திரமாகிய தமிழ் மந்திரத்தில்

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே

சிவ சிவ என்றிடத் தீவினைகள் அனைத்தும் அழிந்து, தேவராகி சிவகதியை அதாவது மீண்டும் பிறப்பில்லாத் தன்மையை அடைவார்கள். சிவ சிவ என்ற மந்திரத்திற்கு உள்ள தனித்தன்மையை எளிமையாகக் கூறியுள்ளார். இதனை சொல்லாதோர் தீவினையாளராகவே இருந்து மீண்டும் பிறப்புக்களை எடுத்து வினைப்பயனை அனுபவிப்பர்.

இதன்வழி வினைகளை அறுக்க, உயிரில்லாத வினையை எம் உயிருடன் இணைக்கும் பரம்பொருளாம் விரிசடைக்கடவுளின் வழி நின்று வினைகளை அறுத்து, விதியை மாற்றி வெற்றி பெறமுடியும் என்பது திண்ணமாகின்றது.

திருமுறைகள் ஓதுவதன் பலன்கள்

வினைகளில் இருந்து விடுபடவேண்டும், திருந்தவேண்டும் என்று நாங்கள் நினைத்தாலும் அதனை செய்யமுடிவதில்லை. அதுவும் விதி தான் என்று பலர் கூறும் விதண்டாவாதம் அவர்களின் அறியாமையினதும்  சோம்பேறித்தனத்தினதும் வெளிப்பாடே. அறியாமையில் இருந்து வெளிவர இறை வழிபாடு குறிப்பாக திருமுறைகள் வழிவகுக்கின்றன.

இறைவன், காலத்திற்குக் காலம் நலிவடையும் சைவத்தினை மேம்படுத்தவும், வினைவயப்பட்டு வாழ்வினை வீணாகக் கழிக்கும் மாந்தரை நல்வழிப்படுத்தவும் கருவிலே திருவாக அருளாளர்களை இப்பூவுலகிற்கு அனுப்பி அவர்கள் வழிநின்று எங்களுக்கு அருளை வழங்கியுள்ளார்.

இவ்வுண்மையை “எனது உரை தனது உரையாக” என்று அருளிச் செய்துள்ள சம்பந்தப் பெருமான் திருவாக்கிலிருந்து அறியலாம். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு ‘சொல்லும்’ மந்திர ஆற்றல் உடையது. எனவே, திருமுறைகளை நாம் ஓதும் போது, அதில் உள்ள மந்திர ஆற்றல், நமது உயிரில் கலந்து, நமது அறியாமையைப் போக்கி, வினைகளை அறுத்து விதியை மாற்றுகின்றன.குறிப்பாக தமிழ் மந்திரங்களாக எங்கள் அருளாளர்கள் தந்த திருமுறைகள் அனைத்தும் இறையருள் பொருந்தியவை. மந்திரத்திறன் கொண்டவை என்பதை மேலே பார்த்தோம்.

திருமுறைகளை ஒதுவதன் மூலம் பழவினைகளை அகற்றியும் , பொருள் விளங்கிப் பாடுவதால் இனி வினைகளை சேர்க்காமலும் , வாழ்வாங்கு வாழும் மாந்தர்க்கு வினைப்பயனை ஊட்டத் தேவை இல்லாததால் நாளடைவில், விதியை மாற்றும் வல்லமையும் திருமுறைகள் நிச்சயம் வழங்குகின்றன. நாளாந்த வாழ்க்கையில் உங்கள் முயற்சிகளை இடையறாது செய்தவண்ணம் திருமுறைகளை பாடி வினைத்தடைகளை அகற்ற வெற்றி நிச்சயம் வரும்.

திருமுறைகளை பண்ணுடன் தான் பாட வேண்டுமா?

கட்டாயமாக பண்ணுடன் பாடினால் தான் அதன் அருள் கிடைக்கும் என்றில்லை. திருமுறைகளை தொடர்ந்து காலையும் மாலையும் கருத்துடன் நாளும் , உடலையும் மனதையும் சுத்தப்படுத்தி இயன்றளவு ஒலி அதாவது தமிழ் மந்திர ஒலி வெளிப்படுமாறு பாடுவது நன்மை பயக்கும். அத்துடன் பாடும் போது சொல்லும் பொருளும் வெளிப்பட உரைக்கின் மிகச்சிறப்பாகும். பண் தெரிந்தவர்கள் பண்ணுடனும் பாடலாம். எதுவாக இருந்தாலும் தமிழ் ஒலிச்சத்தம் வெளிவரவேண்டும்.

இசை முக்கியமில்லை என்பதை, சம்பந்தப்பெருமானின் வரிகளில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

கோழை மிடறாக கவி கோளும் இலவாக இசை கூடும் வகையால்
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன்ன சொல்மகிழும் ஈசன்

வழிபாட்டாலும், தேவாரத் திருப்பதிகங்களை ஓதுவதாலும் பழவினை மற்றும் வருவினை, இப்பிறப்பில் நாம் அனுபவிக்க இருக்கும் வினை ஆகிய இவையெல்லாம் தீரும் என்பது ஆளுடைய பிள்ளையாரின் அறிவுரை.

வல்லதோர் இச்சையினால் வழிபாடு
இவைபத்தும் வாய்க்கச் சொல்லுதல்
கேட்டல் வல்லார், துன்பம் துடைப்பாரே

சிவவழிபாடும், திருமுறை ஒதலும் நிச்சயமாக வினையினால் வரும் துன்பத்தினை நீக்கும். அத்துடன் வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் வல்லார் என்பது எழுதப்படிக்க தெரிந்தவர்கள் திருமுறைகளை படித்து பொருளுணர்ந்து சொல்லுதல் சிறப்பு அத்துடன் எழுதவாசிக்க முடியாதவர்கள் திருமுறைகளை மற்றவர் சொல்ல கேட்பதே போதுமானது என்பதாகும். மேலாக ஈசன் எல்லோருக்கும் சமமானவன் என்பதும் வெளிப்படையாகிறது. படிக்கத் தெரியாதவர்களின் நிலைமைக்கு விதிப்பயன் காரணமல்ல அவர்களின் முயற்றியின்மையே காரணம். அவர்களும் திருமுறைகள் உரக்க கேட்பதன் மூலம் வினைகளை அறுக்கமுடியும்

மேற்குறிப்பிட்ட முறைகளில் திமுறைகளை, காலை மாலை இரண்டு வேளையும் பாடத்தொடங்க நிச்சயம் மாற்றம் தெரியும். தொடர்ந்து பாட துள்ளியோடும் தொடர்ந்து வினைகளே. ஊழ் வினைகள் ஓட நல்வினை பொங்கும் இதன்வழி நிச்சயம் விதிமாறும், எல்லாம் நன்றாகவே நடக்கும். விதிமாற விரிசடையான் வழி நில்லுங்கள். ஆராத இன்பம் அருளுமலையாகிய ஆடல்வல்லானின் அடி போற்றுங்கள். பேராது நிற்கின்ற பெரும் கருணைப் பேர் ஆறாகிய பரம்பொருளின் பாதம் பணியுங்கள். வாழ்வில் வெற்றி நிச்சயம் இது சத்தியம்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

 

திருவம்பலம் தென்னவன்


தென்னாடு – செந்தமிழாகம சிவமடம்
கொக்குவில் , யாழ்ப்பாணம்.



எடுத்த காரியம் வெற்றிபெற, செய்வினைகள் அகல...

மேலும் வாசிக்க...
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் கீர்த்தி திருஅகவல்

மேலும் வாசிக்க...
திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க...

மேலும் வாசிக்க...