தமிழ் வேதம் இறையருளியது

`
இறையனார் அருளியது
  இறையனார்
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே
`
செந்தமிழ் வேதம்
  புறநானூறு
நன்றாய்ந்த நீணிமிர் சடை
முழுமுதல் வன்வாய் போகா
தொன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணந்ந்த ஒருமுது நூல் – 166

பொருள்:
நன்றாய்ந்த நீணிமிர் சடை முழுமுதல் வன்வாய் போகா தொன்று புரிந்த ஈரிரண்டின்

  திருஞானசம்பந்தர்
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நிழல் மேவி அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே
  திருஞானசம்பந்தர்
சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவவேடம் தானினைந் தைம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே
  மாணிக்கவாசகர்
அரும் தவருக்கு ஆலின் கீழ் அறம் முதலா நான்கினையும்
இருந்து அவருக்கு அருளும்அது எனக்கு அறிய இயம்பு ஏடீ
அரும் தவருக்கு, அறம் முதல் நான்கு அன்று அருளிச்செய்திலனேல்
திருந்த அவருக்கு உலகு இயற்கை தெரியா காண் சாழலோ
  திருமூலர்
சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே

பொருள்:
சிவபெருமான் திருவருளால் திருவடியுணர்வு கைவரப்பெற்ற மெய்கண்ட மேலோர் உள்ளத்தில் அமையும் நூல்களில் தலைமையாக இறைவன் எழுப்ப முறையாக எழுந்து ஓதப்பெறும் ஒண்தமிழ் மறைமுறையாகிய முன்னை வேதாகமங்களை யொப்பச் சொல்லையும் பொருளையும் அடியேற்கு உள்நின்று அத்தன் அருளால் உணர்த்தியருளினன் இறைவன் உரைத்த உத்தமமான வேதங்களின் பொருளை, அவனது அருளால் உள்ளுணர்ந்து ஓதுவதால் சிறப்பு பெறுகின்ற மந்திரங்களை உடலும் மனமும் ஒன்று போல் லயித்திருக்கும் பொழுது உள்ளிருந்து உற்பத்தியாகும் பேரின்ப உணர்வுகளை என்மேல் கொண்ட கருணையால் எம் குருநாதனாகிய இறைவன் எமக்கு அளித்து அருளினான்.

  பரஞ்சோதி முனிவர்
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்

பொருள்:
கல்லால மரத்தின் கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சனகர் முதலிய நான்கு முனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தென்முகக் கடவுளை இடையறாமல் நினைந்து பிறவிப் பிணியை வெல்லுவோம்.

`
செந்தமிழ் ஆகமம்
  திருமூலர்
நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரன் அடி நாள்தொறும்
சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற்றேனே

பொருள்:
குருநாதராக வந்துள்ள, இறைவனின் இணையில்லாத திருவடிகளை என் தலை மேல் வைத்துக்கொண்டு, அவர் அருளிய அனைத்தையும் எனது புத்திக்குள் புகுந்து நிற்கும்படி நினைவில் நிறுத்திக்கொண்டு, சூரியன் மறைவில் தோன்றும் இளம்பிறைச் சந்திரனை தனது திருமுடியில் அணிந்துகொண்டிருக்கும் அரனின் திருவடிகளை நாள்தோறும் நினைத்து, தியானித்து அவன் அருளிய ஆகமங்களை சொல்கின்றேன்.

  திருமூலர்
செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பு இலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே

பொருள்:
சிவபெருமானாலேயே சொல்லப்பட்டதால் சிவாகமம் என்ற பெயர் பெற்று, பெருமை வாய்ந்த ஆகமங்களை அப்பெருமானே குருநாதராக இருந்து சொல்ல, அவரின் திருவடிகளை வணங்கி பெற்றுக்கொண்ட பின், ஒரு குறையும் இல்லாத தில்லை அம்பலத்தில் ஆடிய இறைவனின் திரு நடனத்தைக் கண்டு களித்து அந்த ஒப்பில்லாத இறைவனின் நினைப்பிலேயே ஏழு கோடி யுகங்கள் இருந்தேன் என்கிறார் திருமூலர்.

  மாணிக்கவாசகர்
 
மன்னுமாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும் - திருவாசகம்
`
செந்தமிழ் வழிபாடு
  சேக்கிழார்
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டர் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்
  சுந்தரமூர்த்தி
  நாயனார்
நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானை
வலிவ லந்தனில் வந்துகண் டேனே
  அப்பர் சுவாமிகள்
 
சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உலடலுள்ளூறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன் அதிகைக்கெடில
வீராட்டனத்துறை அம்மானே.
   திருஞான
  சம்பந்தர்
தடம் கொண்டது ஒர் தாமரைப்பொன் முடி தன்மேல்
குடம் கொண்டு அடியார் குளிர்நீர் சுமந்து ஆட்டப்
படம் கொண்டது ஓர் பாம்பு அரை ஆர்த்த பரமன் 
இடம் கொண்டு இருந்தான் தன் இடைமருது ஈதோ
`
செந்தமிழ்ச் சிறப்பு
  திருமூல
  நாயனார்
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே
  பரஞ்சோதி முனிவர்
கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழி போல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ
  பரஞ்சோதி முனிவர்
தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்தது, எலும்பு பெண் உருவாகக்
கண்டதும், மறைக் கதவினைத் திறந்ததும், கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்
  சம்பந்தர்
செந்தமிழர் தெய்வமறை நாவர் செழு நன்கலை தெரிந்த அவரோடு
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர்
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண்புனல் வளம் பெருகவே
வெந் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே
  அப்பர் சுவாமிகள்
மின் காட்டும் கொடி மருங்கில் உமையாட்கு என்றும்
விருப்பவன் காண் பொருப்பு வலிச் சிலைக் கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி
தருமிக்கு அருளினான் காண்
பொன் காட்டக் கடிக் கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைக் காட்டக்கண்டு வண்டு
தென் காட்டும் செழும் புறவின் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே

எங்கள் இருக்கை

தென்னாடு சிவமடம்,
தென்னாடு வீதி (குளங்கரை ஒழுங்கை)
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம், இலங்கை.

Thennadu Saiva Tamil Agamic Mutt,
Thennadu Road,
Kokuvil East,
Kokuvil, Sri Lanka.

மடம் திறப்பு மற்றும் பூசை நேரம்

தென்னாடு சிவமடம் காலை 8 மணி முதல் மாலை 8 மணிவரை திறந்திருக்கும். சிவபூசை நேரம் தினசரி மாலை 6 மணி. நிறைமதி மற்றும் கழுவாய் வழிபாட்டுத் தினங்களில் மாலை சிறப்பு பூசைகள் இடம்பெறும்.

தொடர்பு இலக்கங்கள்:
+94 (70) 770 1111,
+94 21 222 9722,
+61 499 493 300